Home » விமான எரிபொருள் களஞ்சிய வசதிகளை மேம்படுத்த திட்டம்

விமான எரிபொருள் களஞ்சிய வசதிகளை மேம்படுத்த திட்டம்

- சர்வதேச விமான சேவைகளை கவருவதே நோக்கம்

by sachintha
October 6, 2023 7:41 am 0 comment

விமானங்களுக்கான எரிபொருளை களஞ்சியப்படுத்தும் வசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் உலகில் ஏனைய நாடுகளில் காணப்படும் விமானங்களையும் கவர முடியும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது காணப்படும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் களஞ்சியப்படுத்தும் தாங்கிகள், எந்த வகையிலும் போதாது என்றும் இதற்கான வசதிகளை அதிகரிக்கும் வேலைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவில் விமான சேவை சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு
தெரிவித்தார்.
அதேவேளை மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைந்த ஸ்ரீலங்கன் கேட்டரிங் கிரவுண்ட் ஹெண்ட்லின் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இணைக்கப்பட்டு இந்த மறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், இந்தியாவின் எயார் இந்தியா விமான நிறுவனம் டாட்டா நிறுவனத்துடன் இணைந்ததாக மறுசீரமைப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்நிறுவனங்களுக்கு விமானங்கள் மட்டுமன்றி விமான நிலையங்களும் உரித்தாகியது. உலகில் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் டாட்டா நிறுவனத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் விமான நிலையங்களிலும் பங்குகள் உள்ளன.

எமிரேட் நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தோடு மாத்திரம் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நாம் நினைத்தால் அது தவறு. நாம் யதார்த்தத்தை உணர வேண்டும்.

அந்த வகையில் நாம் ஸ்ரீலங்கன் விமான சேவையை பலமானதாக கட்டியெழுப்புவதா அல்லது வீழ்ச்சியுறச் செய்வதா என்பது தொடர்பில் நாமே சிந்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் விமானங்களுக்கான எரிபொருள் தொடர்பில் பாரிய அளவில் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமானங்கள் கூட இந்தியாவின் சென்னை விமான நிலையத்திற்கு சென்றே எரிபொருளை பெற்றுக்கொள்ள நேர்ந்தது.

இதற்கு காரணம் இங்கு எரிபொருள் இருக்கவில்லை. அவ்வாறு இங்கு காணப்பட்ட எரிபொருளும் அதிக விலைக்கே விற்கப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT