Thursday, March 28, 2024
Home » ரயில் பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய தொழிற்சங்க நடவடிக்கை

ரயில் பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய தொழிற்சங்க நடவடிக்கை

by sachintha
October 6, 2023 6:00 am 0 comment

ரயில்வே திணைக்கத்தைச் சேர்ந்த இரு பிரிவு ஊழியர்கள் நேற்றுமுன்தினம் திடீரென வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர். நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இத்தொழிற்சங்க நடவடிக்கையால் ரயில் பயணிகள் நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ஒரிரு பிரிவு ஊழியர்கள் வேலைநிறுத்தத் தொழிங்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததை அறிந்ததும் அரச, தனியார் நிறுவனங்கள் தம் ஊழியர்கள் வழமைக்கு மாறாக நேர காலத்தோடு வீடு திரும்ப அனுமதி வழங்கின.

இந்த நிலையில் கொழும்பு புறக்கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் வீடு திரும்புவதற்காக ரயில் பயணிகள் முண்டியடித்தனர். அத்தோடு தலைநகரிலுள்ள ஏனைய ரயில் நிலையங்களிலும் ரயில் பயணிகள் நிரம்பி வழிந்தனர்.

இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையினால் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து ரயில் சேவைகள் மறுஅறிவித்தல் வரையும் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாகவே ரயில் பயணிகள் இவ்வாறான நெருக்கடிக்கு உள்ளாகினர். அத்தோடு நாட்டின் பல பிரதேசங்களுக்கான தபால் சேவை ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.

ரயில் பயணிகளை கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வழமையான ரயில் சேவையைப் பாதிக்கும் வகையிலான இவ்வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை ரயில்வே திணைக்களத்தின் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரே திடீரென்று முன்னெடுத்தனர்.

மாளிகாவத்தை ரயில் தளத்தில் ரயில் துணைக்கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைக் காரணம் காட்டியே ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இவ்வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தது.

ரயில்வே திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தரை சேவையில் இருந்து நீக்குமாறு கோரி இவ்வேலைநிறுத்தத்தை ரயில் கட்டுபாட்டாளர்கள் ஆரம்பித்தனர். இந்நிலையில் துணைக் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று மாலையானதும் சுகவீன விடுமுறையை விண்ணப்பித்து விட்டு சேவையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர், குற்றஞ்சாட்டப்படும் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் சேவையில் இருந்து நீக்கப்படுவாராயின் தாமும் வேலைநிறுத்தத்தில் குதிக்கப் போவதாக ரயில்வே திணைக்களத் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று நண்பகல் வரையும் இத்தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தது. இந்நிலையில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

ரயில்வே திணைக்களத்தின் இரண்டு பிரிவைச் சேர்ந்த இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பை காரணம் காட்டி ரயில் பயணிகள் சேவையை பெரிதும் பாதிக்கச் செய்வது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத விடயமாகும், இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமும் அல்ல. அதேநேரம் இரண்டு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையைக் காரணம் காட்டி ஒரு பொதுசேவையை வேலைநிறுத்தத்தின் மூலம் ஸ்தம்பிக்கச் செய்வதும் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படக்கூடிய விடயமாகவும் இருக்காது.

ரயில் திணைக்களம் உட்பட எந்தவொரு பொதுநிறுவனத்திலும் நினைத்த மாத்திரத்தில், எடுத்த எடுப்பில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது. வேலைநிறுத்தமொன்றை முன்னெடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள், விதிகள் காணப்படவே செய்கின்றன. அந்த விதிமுறைகளுக்கு முரணான வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவே முடியாது. தொழிற்சங்க விதிமுறைகளைப் பின்பற்றியே எந்தவொரு வேலைநிறுத்தத்தையும் முன்னெடுக்க வேண்டும். ஆனால் இந்த வேலைநிறுத்தத்தல் அந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

ரயில்வே திணைக்களத்தின் இரண்டு ஊழியர்களது பிரச்சினைக்காகவும் ரயில் பயணிகள்தான் பலிக்கடாவாக்கப்பட்டனர். இது தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணமான செயற்பாடே அன்றி வேறில்லை. இவ்வாறான செயற்பாடுகள் தொழிற்சங்க உரிமைகளை மலினப்படுத்தவே வழிவகுக்கும். அதற்கு இடமளிக்காத வகையில் தொழிற்சங்க உரிமைகளைப் பிழையாகவும் தவறாகவும் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கக்கூடாது என்பதே மக்களது கருத்தாகும். அதனால் தொழிற்சங்க ஒழுங்கு விதிகளை அதற்கேற்ப பேணிப்பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT