கழிவு முகாமைத்துவத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த வேண்டும்

கழிவு முகாமைத்துவத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, கழிவு முகாமைத்துவ அதிகாரசபையொன்றின் ஊடாக குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நடைபாதைக்கான ஒழுங்கைகளை அமைத்து, வீதிகளை அழகுபடுத்துவதனால் மாத்திரம் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட முடியாது எனக் குறிப்பிட்ட  அமைச்சர், அரசாங்கம் திட்டமிட்டபடி புத்தளம் அறுவாகல்லு பிரதேசத்தில் கழிவு மீள்சுழற்சி திட்டம் ஆரம்பிக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மக்களை முன்நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களாலேயே மீதொட்டமுல்ல அனர்த்தம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறினார்.

மீதொட்டமுல்லை குப்பை மேட்டிலிருந்து நாற்றம் வெளிப்படுகின்றபோதும், சிலருக்கு அந்த நாற்றை நறுமணம் போன்று காணப்படுகிறது. அந்தளவுக்கு குப்பை விவகாரத்தில் அரசியல் புகுந்திருப்பதுடன், மீதொட்டமுல்ல அனர்த்தத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக சேறுபூசுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கும் தமது அரச்சுக்கும் எந்தவிதமான பொறுப்பும் இல்லையென்றும், கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான இடங்களைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தெரிவுசெய்வதற்கான கேள்விப்பத்திரங்களைக் கோருவதே தமது அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்த பணியென்றும் அமைச்சர் கூறினார்.

புத்தளம் அறுவாகல்லு பிரதேசத்தில் குப்பை மீழ்சுழற்சி மையமொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும்,

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடாக சூழல் பாதிப்புக் குறித்து அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து சூழக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுத்துச் செல்ல அரசு தீர்மானித்துள்ளது. அது மாத்திரமன்றி கொழும்பில் குப்பை அகற்றுவது பாரிய பிரச்சினையாகியுள்ளது. அரசாங்கம் அடையாளம் கண்டுள்ள இடங்களில் குப்பைகள் கொட்டப்படும்.கொழும்பு நகரின் குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோதம் 'கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்' என்ற கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கைகூட முடிவுக்கு வந்துள்ளது. அந்தளவுக்கு குப்பை விவகாரத்தில் அரசியல் ஊடுருவியுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...