கல்லில் செதுக்கிய ஓவியம் போன்ற நட்பு | தினகரன்

கல்லில் செதுக்கிய ஓவியம் போன்ற நட்பு

தற்போதைய ரஷ்யாவானது அன்றைய சோவியத் அரசின் மிகப் பெரிய நாடாகத் திகழ்ந்தது. இண்டாவது உலக யுத்தத்தின் பின் சோவியத் தேசம் ஒரே முகாமில் பிரதான ராஜ்ஜியமாக உருவாக்கப்பட்டது.

சோவியத் தேசத்தைச் சுற்றி சோசலிச அரச ராஜ்ய தொகுதியொன்று உருவாகியிருந்தது. சீனாவை தவிர்த்து அம்முகாமில் அரசியல் தலைமைத்துவம் சோவியத் தேசத்தாலேயே வழங்கப்பட்டது. அதனால் சோவியத் தேசம் உலகின் பலம் பொருந்திய நாடாக விளங்கியது. உலகில் யுத்தம் மற்றும் சமாதானம் போன்ற இரண்டு விடயங்களும் தீர்மானிக்கப்படும்போது சோவியத் தேசம் எடுக்கும் முடிவு முக்கியமானது.

இதைத் தவிர இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க காலனி நாடுகளின் சுதந்திர போராட்டத்திற்கு சோவியத் தேசத்தினால் புத்துயிர்ப்பு ஏற்பட்டது. அதற்கான ஒரு காரணம் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் சோவியத் தேசம் பலம்பெற்று மிக வலுவான நாடாக விளங்கியதாகும். அதன் பின்னர் சோவியத் தேசத்தைச் சுற்றி கிழக்கு ஐரோப்பிய சோசலிச அரசும் உருவாகியது.

அதேவேளை, காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்னும் குரல் சோவியத்தின் ஆசீர்வாதத்துடன் மேலும் பலம் பெற்றது. சில நாடுகளின் காலத்துவ எதி்ர்ப்பு விடுதலப் போராட்டத்துக்கு சோவியத் தேசத்தின் உதவி கிடைத்தது. பின்னர் அணிசேரா நாடுகளாக ஆசியா, ஆபிரிக்க நாடுகள் உருவாகின. அவை புதிய சுதந்திர நாடுகளாக குறிப்பிடப்பட்டன.

இரும்புத் திரை விலகல்

இந்நாடுகள் அனைத்தும் காலனித்துவத்துக்கு உட்பட்டதன் காரணமாக அவை ஏகாதிபத்தியத்து எதிரானவையாகின. ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள் சோவியத் தேசத்துடன் நண்பர்களாயின.

பின்னர் அவற்றில் சில நேரடியாகவே சோசலிச நாடுகளாயின. கியூபா, நிக்கரகுவா, அங்கோலா, காஸா போன்ற நாடுகளை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அதற்குக் காரணம் முதலாளித்துவம் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் தங்களைக் காக்க சோவியத் ரஷ்யா என்னும் பலமிக்க ராஜ்யம் உள்ளதாக அவர்கள் நம்பினார்கள். அற்கு சிறந்த உதாரணம் சோவியத் கியூபாவாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை சோவியத் தேசத்துடன் உறவுகளை 1956ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினூடாகவே ஏற்படுத்தியது. அந்த மாற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு மாற்றமாகவே கருதப்பட்டது.

 அத்தோடு அதன் நிர்மாணிப்பாளரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அதுவரை இரும்புத்திரை என்று கூறப்பட்ட சோவியத் தேசத்துடன் தூதுவராலய தொடர்புகளை, ஆரம்பிக்க முயற்சி செய்தார். அதேவேளை கிழக்கு ஐரோப்பிய சோசலிச அரச கட்டமைப்பும் இலங்கைக்குத் திறக்கப்பட்ட இடதுசாரி ஜன்னலாகக் கருதப்பட்டது.

1956ன் பின்னர் ஆரம்பமான பண்டாரநாயக்க யுகத்தில் 1957 பெப்ரவரி 19ம் திகதி சோவியத் தேசம் அல்லது தற்போதைய ரஷ்யாவுடன் தூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் முதலாவது தவைராக அப்போது இருந்த புகழ்பெற்ற அறிவாளியான பேராசிரியர் குணபால மலல சேகரவே நியமிக்கப்பட்டார்.

பின்னர் டி. பி. சுபசிங்க, நெவில் கனகரத்ன, கலாநிதி நிஸ்ஸங்க விஜேரத்ன போன்ற பிரபலமானவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து தூதுவர்களாக கடமையாற்றினார்கள்.

தூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் சோவியத் தேசம் தற்போதைய ரஷ்யா இலங்கையின் சமூகப், பொருளாதார மற்றும் கலாசார துறைகளில் எமக்கு உதவியளித்த பிரபல்யமான நாடாகும். விசேடமாக எமது நாட்டில் உருவான சோசலிச மற்றும் முற்போக்கு எழுச்சியானது சோவியத் மற்றும் சீன, கிழககு ஐரோப்பிய தொடர்புகளின் பலனாகவே ஏற்பட்டது.

1959ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சோவியத் நட்புறவு சங்கம் மூலம் இலக்கிய மற்றும் கலாசார துறைகளில் சோவியத் தொடர்பு ஏனைய நாடுகளை விட இலங்கையில் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. உலக இலக்கியங்களாகப் போற்றப்பட்ட சோவியத் புத்தகங்களும் மற்றும் நாட்டியங்களும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு எமது வாசகர்களிடையே வெகு விரைவாகப் பிரபல்யம் அடைந்தன.

அது நகரத்தில் மாத்திரமல்ல கிராமபுற வீடுகளையும் நோக்கிப் பயணித்தது. மார்டின் விக்ரமசிங்க, கே. ஜயதிலக போன்ற இலங்கையின் எழுத்தாளர்கள் சோவியத் நாட்டின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ளாகிய எமது இலக்கிய வளர்ச்சிக்கு காரணமானதெனக் கூறலாம். ரஷ்யாவிடம் இருந்து கிடைத்த பரிசு எஸ். டபிள்யூ. ஆர். டியுடன் ஆரம்பித்த சோவியத் நட்புறவை மிகவும் உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாகும். டட்லி சேனநாயக்க காலத்திற்கு எதுவித குறைவும் ஏற்படவில்லை.

அதனால் 60 மற்றும் 70 தசாப்தங்களில் கலாசார, பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப துறைகளில் சோவியத் தொடர்புகள் எமது நாட்டிற்கு மிகவும் பிரயோசனமான முறையில் காணப்பட்டது.

ஒருவல உருக்கு தொழிற்சாலை மற்றும் களனி டயர் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் சோவியத் தேசத்தால் எமக்களிக்கப்பட்ட அன்பளிப்பாகும். அன்று இலங்கையில் கைத்தொழில் எழுச்சிக்கு சோவியத் நாடு உள்ளிட்ட சோசலிச நாடுகளின் பங்களிப்பே பெரும் உதவியாக இருந்தது.

தேயிலை, இறப்பர், தென்னை, தும்பிலான உற்பத்திப் பொருட்களை சோவியத் நாடு விலைக்கு வாங்கியது. எமது ஏற்றுமதி துறைக்கு பெரும் பங்களிப்பாகியது. 1960ம ஆண்டிலிருந்து க. பொ. த உயர்தரம் கற்ற இலங்கை மாணவ மாணவிகளுக்கு சோவியத் நாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப் பரிசில்கள் வழங்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றும் எமது தேயிலையில் 17 வீதத்தை ரஷ்யாவே வாங்குகின்றது.

தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்

மேற் கூறியவற்றை நோக்கும்போது ரஷ்யா பல தசாப்தங்களாக எமது உண்மையான நண்பராகியுள்ளது.

எமது நாட்டை முன்னேற்றுவதற்கு சுரண்டலின்றி எமக்கு உதவி புரிந்த பிரதான நாடு ரஷ்யாவாகும். சோவியத் நாட்டால் இலவசமாக கிடைத்தவற்றைக்கூட நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு நன்மைப்படுத்தாமல் விற்று சாப்பிட்ட நாடு என்று இலங்கை பிரபல்யமடைந்துள்ளது.

அதேபோல் கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான உறவை இதைவிட சிறந்த முறையில் மேம்படுத்தக்கூடிய சந்தர்ப்பம எம்மால் கை நழுவிடப்பட்டுள்ளது. இயற்கை வாயு உற்பத்தி செய்யப்படும் முக்கிய நாடாக ரஷ்யா கருதப்படுகின்றது. ஆனால் இலகுவான முறையில் அதன் நன்மையைப் பெற எமது நாடு எவ்வித முறையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எதிர்கால நன்மைகள்

இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ரஷ்ய விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்று பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கு ரஷ்ய விஜயத்துக்கு அழைப்பு விடப்பட்டபோதும் அவர் அதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு விட்டார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ரஷயாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது இலங்கைத் தலைவியானார். 1963ம் ஆண்டு அப்போது நிகிதா குரூஸேப் ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது விசேட அம்சமாகும்.

விசேடமாக மேற்குலக நாடுகளுக்கு விசுவாசமில்லாத நாடுகளில் அன்று இலங்கைக்கு இருந்த அங்கீகாரம் மீண்டும் மைத்திரி ஆட்சியில் கிடைத்துள்ளது என்பதை ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோல் தற்போதைய அரசு மேற்குலக நாடுகள் சார்பாக அரசென்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு தகுந்த பதிலாகும்.

விசேடமாக தற்போதை ரஷ்யாவின் புட்டின் ஆட்சிக்கு எப்போதும் சர்வதேச ரீதியாக எமது நாடு நண்பனாகவே செயல்பட்டு வருகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் மகாநாட்டில் எமக்கு எதிராக நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது சீனா மற்றும் ரஷ்யா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் எமக்கு ஆதரவு வழங்காதிருந்தால் எமது நிலைமை மோசமாகி இருக்கும். அன்றுபோல் இன்னும் ரஷ்யா எமக்கு மாறாத நண்பனாகும்.

அந்த நட்பை மைத்திரி ஆட்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து மேலும் சமூகப், பொருளாதார துறைக்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய நன்மைகள் பற்றி தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் கல்லில் செதுக்கிய ஓவியம் போன்றது. ஒருபோதும் மாறாது. ரஷ்ய நட்பு புதிப்பிக்கப்பட்டுள்ளதாக கொள்ளப்படுகின்றது.

புட்டினின் ஆட்சி ரஷ்யாவை மீண்டும் சர்வதேச பலம் பொருந்திய நாடாக மாற்றியுள்ளது. அந்த பலம் இலங்கைப் போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பெரும் சக்தியாகும். அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்தின் மூலம் மீண்டும் எமக்கு துன்பம் வரும்போது உதவும் நல்ல நண்பனை நாம் பெற்றுள்ளோம்.

வசந்தபிரிய ராமநாயக்க
தமிழில்: வயலட்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...