Tuesday, March 19, 2024
Home » சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இந்தியாஸ் MP சபையில் தெரிவிப்பு
சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலம் விடயத்தில்

சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இந்தியாஸ் MP சபையில் தெரிவிப்பு

by mahesh
October 4, 2023 8:30 am 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சிறப்புரிமை குழு மூலம் நீதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையொன்றை முன் வைத்து, உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினராக நான், முதன்முறையாக முன்வைத்த இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் குறிப்பிட வேண்டும்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் எனது கடமைகளை செய்கையில், வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தி, இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்குள்ள சிறப்புரிமைகள் பாரதூரமாக மீறப்படுவதையே சபையில் முறைப்பாடாக முன்வைக்கின்றேன்.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை நிலையியற் செயற் குழுவின் உத்தரவுகளை நிறைவேற்றத் தவறுவது , நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு சவால் விடுவதாக அமையும்.

நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க,பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக, மூன்று தனிநபர் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2021 ஜனவரியில் பொதுச் செயலாளரிடம் நான், சமர்ப்பித்தேன்.

இவை, இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை.

இம்மூன்று சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, கடந்த வருடம் 2022 ஜூலை 06 இல், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட அமைச்சினால் இது தொடர்பான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு இது அனுப்பப்பட்ட போதும்,அந்த சட்டமூலங்களுக்கான உரிய அறிக்கைகள் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை, பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை.

குறித்த சட்டமூலங்களுக்கான அறிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சிடமிருந்து ஆறு மாதங்களுக்குள் கிடைக்கவில்லை என்றால் அச்சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்கான ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்க முடியும்.

இதன்படி, பாராளுமன்றம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான எனது தனிநபர் சட்டமூலங்களை ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்குமாறு, கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்குதெரிவித்துள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் எவ்வித இடையூறு இன்றியும், துன்புறுத்தல் இன்றியும் நிறைவேற்றுவதற்குத் தேவையான சுற்றுச்சூழலைப் பெற்றுக் கொடுப்பது சபாநாயகரின் பொறுப்பாகும்.

பாளுமன்றத்தின் பாரபட்சமற்ற தன்மை, கௌரவம்,கண்ணியம் ஆகியவை கேள்விக்குட்படுத்தப்படாமலும், அவமதிக்கப்படாமலும் இருக்கும் வகையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவது மிகவும் முக்கியம்.

இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை தடுக்கும்,துன்புறுத்தும் மற்றும் அவமரியாதை செய்யும் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் நடைபெறாமல் தடுப்பதும் சபாநாயகரின் பொறுப்பு.

எனவே இந்த விடயத்தை சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பி விரைவில், அக்குழுவைக் கூட்டி நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT