Friday, April 26, 2024
Home » கோதுமை மாவுக்கு விலைச் சூத்திரம் அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரை
விரும்பியவாறு விலையை தீர்மானிக்க விடாமல்

கோதுமை மாவுக்கு விலைச் சூத்திரம் அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரை

by mahesh
October 4, 2023 7:20 am 0 comment

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச் சூத்திரம் அவசியமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தெரிவித்தார். கோதுமை மாவுக்கு விலைச் சூத்திரத்தைப் பேணினால், விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு முடியாமல் போகும் என்றும் தெரிவித்தார். நாட்டின் களஞ்சியங்களிலுள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில்,தடயவியல் கணக்காய்வு மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே, இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. நாடு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்களில் வெவ்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இருந்தபோதும் நிதி அமைச்சு வழங்கிய விலைக்கு அமைய ஒரு கிலோ கோதுமை மாவை 198 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப் படுவதாகவும், இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தலைவர் வலியுறுத்தினார்.

கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டதால், விலை அதிகரித்துள்ளது.இந்நிலையில்,ஏற்கனவே களஞ்சியங்களில் இருந்த கோதுமை மாவுக்கும் புதிய வரியை உள்ளடக்கி விலையை அதிகரித்து விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் சமையல் எரிவாயு மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT