Thursday, April 25, 2024
Home » அனர்த்தங்களை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்

அனர்த்தங்களை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்

by mahesh
October 4, 2023 6:00 am 0 comment

நாட்டில் சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. மழையுடன் கூடிய இந்தக் காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் கடந்த சில தினங்களாக கனத்த மழை அடிக்கடி பெய்து வருகின்றது. இம்மழை காரணமாக குளங்கள், நீரந்து பிரதேசங்கள், நீர்த்தேக்கங்கள் என்பன நிரம்பியுள்ளன.

சில நீர்த்தேக்கங்களின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகலு ஓயா, மகுரு கங்கை மற்றும் உடவளவ நீர்த்தேக்கம் என்பவற்றின் நீர்மட்டம் பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக இக்கங்கைகளின் இருமருங்குகளிலும் காணப்படும் தாழ்நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தென்மாகாணத்தின் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களது தாழ்நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிப் போக்குவரத்தும் சில வீதிகளில் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்தோடு திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலை கட்டடங்களுக்கு உள்ளேயும் நேற்று முன்தினம் வௌ்ள நீர் புகுந்திருந்தன.

அதன் காரணத்தினால் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை பெரிதும் வீழச்சியடைந்திருந்ததோடு கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்ததாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவை இவ்வாறிருக்க, இந்த சீரற்ற காலநிலையினால் மலையகத்திலும் மலை சார்ந்த சில பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலலையில் கேகாலை சென் ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மண்சரிவு அச்சறுத்தல் காரணமாக மறு அறிவித்தல் வரை நேற்றுமுன்தினம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்தோடு மலையகத்தின் வேறு சில பிரதேசங்களிலும் சிறுசிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதன் காரணத்தினால் கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருக்கின்றது. இந்த முன்னெச்சரிக்கை குறித்து கவனயீனமாக நடந்து கொள்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழ்பவர்கள் மண்சரிவுக்கான முன்னறிகுறிகள் குறித்து கூடுதல் கவனத்துடன் செயற்படத் தவறக்கூடாது.

அதேநேரம் நீர்மட்டம் உயர்ந்த வண்ணமுள்ள கங்கைகள், ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், திடீரென வெள்ளநிலை ஏற்படுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள நிலை குறித்து தமக்கு அறியத் தருமாறும் மக்களைக் ​கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், தற்போது தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவசர நிலைமைகளின் போது செயற்படக்கூடிய வகையில் 25 மாவட்டங்களுக்கும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மக்கள் நலன்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதையே இராஜாங்க அமைச்சரின் இந்த அறிவிப்புக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

தற்போதைய சீரற்ற காலநிலையினால் 09 மாவட்டங்களில் 112 பிரதேச செயலகப் பிரிவுகளில் 7694 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து முன்னவதானத்துடன் இருப்பதோடு அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் சேதங்களையும் குறைத்துத் தவிர்த்துக் கொள்வதில் மக்களும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சீரற்ற காலநிலையின் அச்சுறுத்தலைத் தவிர்த்துக்கொள்ளலாம். அதுவே துறைசார் நிபுணர்களின் கருத்தும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT