கீதாவின் எம்.பி. பதவி நிலைக்குமா? மே 03 இல் தீர்ப்பு

Rizwan Segu Mohideen
 
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல சிங்கள நடிகையுமான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை, அவரது இரட்டை பிரஜா உரிமை காரணமாக பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (14) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்ததோடு, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
 
கீதா குமாரசிங்க சுவிஸ்லாந்து பிரஜாவுரிமையை கொண்டுள்ளமையால், இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ஒருவருக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வகிக்க முடியாது எனும் அடிப்படையில், காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரால், குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
 
ஆயினும் தாம் சுவிஸ்லாந்து குடியுரிமையிலிருந்து வெளியேறியுள்ளதாக கீதா குமாரசிங்க தரப்பு குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து, அது குறித்தான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, கோரப்பட்டிருந்த போதிலும், அவ்வாவணங்கள் சமர்ப்பிக்கபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசாரணைகளின்போது, கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனை மறுக்கும் வகையிலான ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாத நிலையிலும், இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள அவர், அரசியலமைப்பு விதிகளுக்கு அமைவாக பாராளுமன்ற பிரதிநிதித்துவ பதவி வகிக்க முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான  பதில் சொலிசிட்டர் நாயகம் ஜனக் டி சில்வா நீதிமன்றிற்கு அறிவித்தார்.
 
இதனை ஆராய்ந்த, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, குறித்த மனு தொடர்பிலான எழுத்து மூல அறிவுறுத்தலை ஏப்ரல் 05 ஆம் திகதி வழங்குவதற்கும், அது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் மே 03 ஆம் திகதி அறிவிக்கவும் முடிவு செய்தனர்.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 14 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...