Rape சீனில் ரெஜினா

தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நேருவது அழகிய விபத்துதான். ஹீரோயின்கள் இங்குதான் அறிமுகமாவார்கள். ஆனாலும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இன்றி தெலுங்குக்கு போவார்கள்.

இங்கே சுமாராக திரையில் தெரிந்தவர்கள், அங்கே பேரழகிகளாக உருவெடுத்து சக்கைப்போடு போடுவார்கள். பின்னர் நாம் நிராகரித்தவர்களையே பல இலட்சம் கொட்டி மீண்டும் இங்கே அழைத்து வரவேண்டும். தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமான ரெஜினாவின் கதையும் இதுதான். ரெஜின செசண்ட்ரா இப்போது தெலுங்கின் முன்னணி நடிகை. தமிழில் அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

* தமிழ் சினிமா ஹீரோயின்கள் எல்லாருமே தற்குறி ஹீரோவைதான் விரட்டி விரட்டி காதலிக்கிறீங்க?

சார், படத்துலேதான் கேரக்டர் அப்படி. நிஜத்துலே பெண்களுக்கு நேர்மாறான ஆண்களைதான் பிடிக்கும். தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிப் படங்களிலும் கதையமைப்பு அப்படிதான் அமையுது. எந்தவொரு கேரக்டருக்குமே நெகட்டிவ் ஷேட் உண்டு. நல்லவன் கேரக்டருக்கு இமேஜ் ஏத்தணும்னா, அவனை எதிர்க்கிற கெட்டவனோட இமேஜை தாறுமாறா ஏத்தணும். இப்போ வில்லனுக்கும் சில நல்ல தன்மைகள் கொண்டு வர்றதாலே, அவனை எதிர்க்கிற ஹீரோவுக்கும் சில நெகட்டிவ்வான தன்மைகளை படைப்பாளிகள் உருவாக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.

மற்றபடி ஹீரோவோட சாகஸங்களையும், தனித்தன்மையான சில தியாகங்களையும் பார்த்துதான் ஹீரோயின்கள் லவ்வுலே விழுறமாதிரி காட்சியமைப்புகள் இருக்கு. பொறுக்கியா இருந்தா மட்டுமே ஃபிகர் மடங்கிடும்னுலாம் யாரும் படமெடுக்கிறது இல்லே. ஹீரோவுக்குள்ளே இருக்கிற வில்லனோட தன்மை படத்தோட ஸ்க்ரீன்ப்ளேவை சுவாரஸ்யமாக்குறதுக்குதானே தவிர, கெட்டவனை பெண்கள் காதலிப்பாங்கன்னு சொல்லுறதுக்கு இல்லே. என்னை ஏன் சார் இப்படி சீரியஸா எல்லாம் பேசவைக்கிறீங்க. நான் ரொம்ப சின்னப் பொண்ணு. ஏதாவது ஜாலியா பேசலாமே?

* தெலுங்குன்னாலே கிளாமர்தான். இப்போ அங்கே என்ன பண்ணுறீங்க?

தெலுங்குன்னாலே கலர்ஸ், கிளாமர் என்பதெல்லாம் இங்கே நாம செஞ்சி வெச்சிருக்கிற கற்பனை. அங்கே நல்ல கதையும், கேரக்டரும் அமைஞ்சதாலேதான் நான் ரெகுலரா படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அதிர்ஷ்டவசமா அங்கே நான் பண்ணின எல்லா படமும் ஹிட். அசைக்க முடியாத ஓர் இடம் கிடைச்சிருக்கு. அதை தக்க வெச்சுக்கறதுக்கே பெரும் போராட்டம் நடத்துறேன். தெலுங்குலே தொடர்ச்சியா நான் படம் நடிக்கிறதுக்கு அதுதான் காரணம். இப்போகூட சந்தீப் ஜோடியா கிருஷ்ணவம்சி டைரக்‌ஷனில் ஒரு படம் பண்ணிக்கிட்டிருக்கேன்.

* இளம் ஹீரோ சந்தீப்போடு மட்டும் ரொம்ப நெருக்கமா நடிக்கிறீங்களாமே?

ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோவோட அடுத்தடுத்து ரெண்டு படம் செஞ்சாலே கிசுகிசுவுக்கு றெக்கை முளைச்சிடும். நாங்க மூணு படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். சும்மாவா இருப்பீங்க? நெருக்கமா நடிக்கணுமா, நாலடி டிஸ்டன்ஸ் விட்டு நடிக்கணுமான்னு எல்லாம் கதைதான் முடிவு பண்ணுது. சந்தீப் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு. நாங்க ஃபேமிலி ஃபிரெண்ட்ஸாவும் இருக்கோம். அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவேன். சாப்பிடுவேன். அரட்டை அடிப்போம். நல்ல நட்பை கொச்சைப்படுத்தாதீங்க சார்.

* செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறதுன்னா நடிகைகள் கதறுவாங்க. உங்க அனுபவம்?

தான் கற்பனை செஞ்ச ஒரு காட்சியை தத்ரூபமா திரைக்குக் கொண்டுவரணும்னு நெனைக்கிறவரு. படப்பிடிப்பில் அப்படி அமையலேன்னா டென்ஷன் ஆயிடுவாரு. காம்ப்ரமைஸ் என்கிற பேச்சுக்கே அவரிடம் இடமில்லை. அர்ப்பணிப்பு மிகுந்த இயக்குநர். நடிக்கிறப்போ நெற்றியை சுருக்கக்கூடாது, கண்களை சிமிட்டக்கூடாதுன்னு சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட கவனம் செலுத்துவாரு. டயலாக் பேசுறப்போ இதுமாதிரி முகத்தில் ஏதாவது அசைவுகள் தெரிஞ்சா, மறுபடியும் டேக் எடுப்பாரு.

இப்படி பர்ஃபெக்டா அவர் வேலை வாங்குறதை டார்ச்சர்னா சொல்லணும்? அவரோட டைரக்‌ஷனில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மரியம் என்கிற கேரக்டரை செய்யுறேன். படம் முழுக்க அந்த கேரக்டரோட மூடு நம்ம முகத்தில் தெரியணும்னு எதிர்ப்பார்ப்பார். சில நாட்கள் கேப் விட்டு வேறு படங்களில் நடிச்சிட்டு வர்றப்போ, என்ன ரெஜினா... மரியமை மறந்துட்டீங்களா? நீங்க மரியமாவே மாறணும்னு சொல்லுவாரு. ரொம்ப பொறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக் கொடுப்பாரு.

இந்தப் படத்துலே அநாதை விடுதியிலே தங்கியிருக்கிற நான், எஸ்.ஜே.சூர்யாவோட வீட்டுக்கு வேலைக்காரியா வருவேன். சூர்யாவோட மனைவி நந்திதா ஸ்வேதா. அவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கும். இந்தப் படத்துலே நான் பேயா நடிக்கிறதா பத்திரிகைகளில் எழுதறாங்க. அப்படியான்னு படத்தைப் பார்த்துதான் ரசிகர்கள் தெரிஞ்சுக்கணும்.

படத்துலே எனக்கு ரேப் சீன் இருக்கறதாவும் ஒரு பத்திரிகையில் படிச்சேன். எதுவுமே தெரியாம எல்லாத்தையும் பக்கத்துலே இருந்து பார்த்தமாதிரி எப்படிதான் எழுதறாங்களோ? படத்துலே ஒரு சீன் ரொம்ப பிரமாதம். நான் அதுக்காக நூற்றியெட்டு இடங்களில் மாறி மாறி நின்னு வசனம் பேசி நடிக்கணும்.

வசனமென்னவோ சின்னதுதான். ஆனா, ஒவ்வொரு இடத்துலே நின்னு பேசுறப்பவும் ஒவ்வொரு முகபாவத்தை கொண்டுவரணும். எந்தவொரு நடிகைக்குமே இது சவாலான காட்சிதான். நான் அந்த சேலஞ்சை எடுத்துக்கிட்டு சிறப்பா செய்திருக்கேன். இந்த சீன் படத்துலே எவ்வளவு நேரம் வரும்னு இப்போவரை எனக்கு தெரியாது.

ஒரு நாள் முழுக்க இந்த காட்சியை அவ்வளவு நுணுக்கமா எடுத்திருக்காரு செல்வராகவன். அவர் என்ன சொன்னாரோ அதைதான் நான் செஞ்சிருக்கேன். நான் எப்படி நடிச்சிருக்கேன்னு மானிட்டரில் பார்க்குற பழக்கம் எனக்கில்லை. நல்லா பண்ணியிருக்கீங்கன்னு டைரக்டர் சொல்லுவதை நம்புவேன். நெஞ்சம் மறப்பதில்லையை பொறுத்தவரை முழுமையாக என்னை செல்வராகவனிடம் ஒப்படைச்சிருக்கேன்.

என்னோட உழைப்புக்கும், அர்ப்பணிக்குமான பாராட்டுகள் நிச்சயம் கிடைக்கும்னு நம்பறேன். செல்வா சாரோட டைரக்‌ஷனில் மீண்டும் படம் செய்கிற வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் செய்வேன். டார்ச்சர்னு சொல்லுறதெல்லாம் ஓவர். அவர் எதிர்ப்பார்க்கிறதை கொடுக்கலைன்னா திட்டுவாரு. எல்லா டைரக்டரும் செய்யுறதுதானே?

* ஃப்யூச்சர் பிளான்?

எதுவுமில்லை. நாளைக்கு என்ன நடக்கும்னு ஜோஸியம் சொல்ல முடியாது. அதைப் பத்தி எதுக்கு யோசிக்கணும். எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூ ரேஸில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

* நாங்க அதை கேட்கலை.

கல்யாணம்,கச்சேரி பத்தி பேசுறோம். லவ் மேரேஜ்தான் செய்வேன்னு முன்னாடி சொல்லியிருந்தீங்க. யாரையாவது லவ்வ ஆரம்பிச்சுட்டீங்களா?

ஓ ஜீசஸ். அதர்வாவோட நான் சேர்ந்து நடிக்கிற ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்துலே ஒரு கல்யாண சீன் வரும். அந்த காட்சிக்காக எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்தேன். அவ்ளோதான். நான் என்னோட காதலனை ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டதா நெட்டுலே தீ பரவிடிச்சி. என்னோட குளோஸ் ரிலேட்டிவ்சும், ஃபிரெண்ட்சும் போன் பண்ணி, எங்களையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிடலையே?ன்னு கேட்குற அளவுக்கு செய்தி பரவிடிச்சி. என்னடா இது வம்பாப் போச்சேன்னு அந்த போட்டோவை டெலீட் பண்ணிட்டேன்.

ஆக்சுவலா, இந்த நொடிவரை என்னோட இதயம் காலியாதான் இருக்கு. அதுக்கு குடிவரப்போகிற ராஜகுமாரன் யாருன்னு உங்களை மாதிரியே நானும் ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கேன். நிச்சயமா லவ் மேரேஜ்தான். எனக்கு அரேஞ்ச்ட் மேரேஜில் அவ்வளவு ஆர்வமில்லை. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...