மனைவியை கொல்ல வந்தவரை பிரதேசவாசிகள் கொலை

(கோப்புப் படம்)
 
தனது மனைவியை கொல்வதற்காக வந்த நபரை, பிரதேசவாசிகள் தாக்கியதில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
 
இரத்தினபுரியிலுள்ள, கிரிஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
நேற்று (13) பிற்பகல் குறித்த நபர், தனது மனைவியை கொல்லும் நோக்கில், ஆபத்தான அமிலம், கூரிய ஆயுதத்துடன் வந்து, அப்பெண்ணை தாக்க முற்பட்ட நிலையில் குறித்த பெண் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியிலிருந்த மக்கள் ஒன்று திரண்டு குறித்த நபரை சராமரியாக தாக்கியுள்ளனர்.
 
இதேவேளை, குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்தப்படுவதாக கிரிஎல்ல பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்து, அந்நபரை மீட்டு கிரிஎல்ல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதேவேளை, குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு, மனைவியின் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன், மனைவியைத் தாக்கிய நிலையில் அவர் காயத்திற்குள்ளாகியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தில் மரணமடைந்தவர், தம்புலுவன, கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 23 வயதான தம்புலுவன மனந்தலாகே சுமுசு மஹேஷ் திலகரத்ன என்பவராவார்.
 
பிரேதம், தற்போது கிரஎல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (14) பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த நபரின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...