Saturday, April 20, 2024
Home » சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

- பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களும் சமர்ப்பிக்கப்படும்

by Prashahini
October 3, 2023 9:31 am 0 comment

– பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (03) காலை 9.30க்கு கூடுகிறது.

இக்கூட்டத்தொடரில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவின் உத்தரவிற்கமைய திருத்தங்களுக்கு உட்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இதனிடையே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினூடாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய ஆணைக்குழுவினால் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து இணையத் தொடர்பாடல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்த 2 சட்டமூலங்களும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

2023 ஒக்டோபர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), மத்தியஸ்த (விசேட வகுதிளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். 

2023 ஒக்டோபர் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட மூன்று தீர்மானங்கள் (2336/72, 2338/54 மற்றும் 2341/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டவை), விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (2332/14, 2332/53, 2337/16 மற்றும் 2340/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டவை) மற்றும் இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்று பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திப்புவேளையின் போதான இரு வினாங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். 

2023 ஒக்டோபர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்’ நடத்தப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT