முடிந்தால் பசீர் சேகுதாவூத் எம்.பியாகட்டும் | தினகரன்

முடிந்தால் பசீர் சேகுதாவூத் எம்.பியாகட்டும்

 
பசீர் ஷேகுதாவூத் முடிந்தால் மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராகி காட்டட்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
 
காத்தான்குடியில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மீள் எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் பசீர் சேகுதாவூத் முடிந்தால் மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராகி காட்டட்டும் என நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்தி அதனை அழிப்பதற்கு முஸ்லிம் காங்கிரசுக்குள்ளேயே இருந்து கொண்டு சதி செய்தவர்கள் இன்று அக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இனி இந்தக் கட்சியை தூய்மைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
 
தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் முஸ்லிம்களின் அரசியல் சக்தியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே திகழ்கின்றது.
 
அதனை பலப்படுத்த வேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கின்றது. தமிழ் தேசிய அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பல்வேறு விமர்சனங்களை  தமிழ் மக்களில் சிலர் முன் வைத்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்கள் பலப்படுத்தியுள்ளனர். அதனால்தான் தமிழ் மக்களின் குரலாக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.
 
அதே போன்றுதான் முஸ்லிம்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரசின் மீது என்னதான் விமர்சனங்களை முன் வதை;த போதிலும் முஸ்லிம்களின் பெரும் ஆதரவை பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இன்று வேறு கட்சிகளில் இருந்தாலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றோருக்கு அரசியல் முகவரியை ஏற்படுத்திக் கொடுத்ததே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டே யாகவேண்டும். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இவர்கள் இல்லாத போது இதில் சிலர் மக்களால் தூக்கிய எறியப்பட்டு முள்ளனர்.
 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்குமிடையில் பல வித்தியாசங்களை பார்க்கலாம்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் அமைச்சர் றிசாட்பதியுதீன் தலைமையிலான கட்சி முஸ்லிம்களின் அரசியல் உரிமையை பெற்றுத்தரும் கட்சியல்ல.
 
அது ஒரு பஸ் வண்டி போன்றது. தேர்தல் வந்தால் அமைச்சர் றிசாட்பதியுதீன் ஒரு பஸ் வண்டியை எடுத்துக் கொண்டு அதன் சாரதியாக அவர் இருப்பார் அதில் முஸ்லிம் காங்கிரசிலிருந்து கழிக்கப்பட்ட சிலரை ஏற்றிக் கொண்டு போவார் போகப் போக அதிலிருந்து சிலர் இறங்கி வடுவார்கள். அவ்வாறுதான் அமீர் அலியுமாகும்.
 
தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரசை விடவும் மிகவும் ஒதுக்கப்பட்டு விட்டது.
 
கடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்ததையடுத்து தேசிய காங்கிரசினதும் அதன் தலைவர் அதாவுல்லாஹ்வினதும் அரசியல் முடிந்து விட்டது.
 
இவ்வாறுதான்  இவர்களின் நிலைமை இருக்கின்றது. தனி நபரை நம்பி நமது முஸ்லிம் சமூகத்தினை இவர்களிடம் அடமானம் வைக்க முடியாது.
 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம் சமூகத்துக்கான கட்சியாகும்.  பெருந்தலைவர் எம்.எச்.எம்அஷ்ரப் அவர்களின் மறைவையடுத்து இந்தக் கட்சி பல கறடு முறடான பாதைகளில் பயணித்து பல் வேறு சவால்களை சந்தித்து இந்த நிலைமைக்கு வந்துள்ளது.
 
இந்தக் கட்சியை அழிக்க வேண்டுமென கங்கனம் கட்டி இந்தக்கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டிருந்த சூத்திரதாரிகள் இன்று அடையாளப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
 
சமூகத்தின் அரசியல் விடுதலையை தனி நபர்களிடம் அடகு வைக்க முடியாது.  கட்சியைப் பலப்படுத்தி அதனை புத்துயிராக்க அனைத்து உறுப்பினர்களும் முயற்சிக்க வேண்டும்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்பது ஒரு பாரிய விடயமாகும். முறைந்த தலைவர் அஷ்ரப் செய்த தியாகத்தை போன்று இன்றைய தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களும் சிறப்பாக கட்சியை வழி நடாத்தி  செல்கின்றார் என்றார்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...