Friday, March 29, 2024
Home » இயற்கை அனர்த்தங்களில் அதிக விழிப்புணர்வு தேவை!

இயற்கை அனர்த்தங்களில் அதிக விழிப்புணர்வு தேவை!

by damith
October 2, 2023 6:09 am 0 comment

நாட்டின் சில மாகாணங்களில் கடந்த பல தினங்களாக அடிக்கடி மழை பெய்த வண்ணமுள்ளது. தற்போதைய மழைக்காலநிலை எதிர்வரும் ஆறாம் திகதி வரையும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மழைக்காலநிலையினால் குளங்கள், ஏரிகள், நீரேந்து பிரதேசங்கள், தாழ் நிலங்கள், நீர்த்தேக்கங்கள் என்பன நீரினால் நிரம்பியுள்ளன.

அத்தனகலு ஓயா, நில்வள கங்கை, களுகங்கை, மகுரு கங்கை ஆகியன பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதோடு மில்லகந்த போன்ற தாழ்நிலங்களிலும் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் உடவளவ, ரன்டம்பே, விக்டோரியா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பதுளையிலுள்ள ராவண எல்ல நீர்வீழ்ச்சி, கொலஸ்லந்தவிலுள்ள தியலும நீர்வீழ்ச்சி, ஹல்துமுல்லவிலுள்ள பம்பரகந்த நீர்வீழ்ச்சி, மீஹாகியூலவிலுள்ள துன்ஹிந்த நீர்வீழ்ச்சி ஆகியனவும் அதிக நீர் வடிந்தோடும் நிலையை அடைந்துள்ளன.

இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம், ‘தற்போதைய சூழலில் நீர் வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்பவர்கள் அங்கு நீராடுவதையும் அருகில் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு ​கேட்டுள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தில் வசிப்பவர்களும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் இந்த அறிவுறுத்தல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தத் தவறக்கூடாது’ என்றும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பம்பஹின்ன, சமனநலவெவ மற்றும் கல்தொட்ட ஊடாக கூரகல புனித பூமி, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் தூவிலி போன்றவற்றை பார்வையிட செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கல்தொட்ட பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

வளவகங்கை, களுகங்கை, சமனலவெவ நீர்த்தேக்கம் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரங்களில் கூடாரம் அமைத்துத் தங்குதல், செல்பி எடுத்தல், நீராடுதல், மீன்பிடித்தல் போன்றவாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

உண்மையில் இது காலத்திற்கு அவசியமான அறிவுறுத்தலும் வேண்டுகோளும் ஆகும். ஏனெனில் தற்போதைய மழைக்காலநிலையுடன் சேர்த்து குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீரேந்து பிரதேசங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதோடு எந்த வேளையிலும் திடீரென நீர்மட்டம் அதிகரிக்கலாம். அதனால் நீர்வீழ்ச்சிகளிலும், குளங்களிலும் ஆறுகளிலும் நீராடுவதையும் அவற்றுக்கு அருகில் செல்வதையும் மாத்திரமல்லாமல் மீன்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கங்கைகளில் நீரோட்டம் காணப்படும் போதும் குளங்களில் வான் போடும் போதும் நீராடுவதற்கு ஆர்வம் காட்டுபவர்கள் சமூகத்தில் அதிகமுள்ளனர். ஆனால் தற்போதைய மழைக்காலநிலையினால் ஆறுகளிலும் கங்கைகளிலும் நீர்வீழ்ச்சிகளிலும் நீரோட்டம் திடீரென அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. ஏற்கனவே பல இடங்களில் இவ்வாறு திடீரென நீர்மட்டம் உயர்ந்து உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன,

அதனால் இவ்வாறான இடங்களில் நீராடுவதையும் மீன்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளவதில் கூடுதல் கவனம் செலுத்துவது வேண்டும். அதன் ஊடாக நீரில் அடித்துச் செல்லப்படுதல், நீரில் மூழ்கி உயிரிழத்தல் போன்றவாறான உயிராபத்து அனர்த்தங்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தற்போதைய மழைக் காலநிலையுடன் சேர்த்து மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 30 பிரதேச செயலப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழ்பவர்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயற்படுவது அவசியம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வீட்டுச் சுவர்களிலும் நிலத்திலும் திடீரென வெடிப்புக்கள் ஏற்படல், நீரூற்றுகள் உருவாதல், அவற்றின் ஊடாக சேற்று நீர் வெளிப்படல், மரங்கள் திடீரென சாய்தல் போன்றவான அறிகுறிகள் ஏற்படுமாயின் தாமதமின்றி பாதுகாப்பாக இடங்களை நோக்கி மக்கள் இடம்பெயரவும் தவறக்கூடாது.

இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக மழைக்காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும். அந்த அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும செயற்பட வேண்டும். அதுவே இன்றியமையாததாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT