Wednesday, April 24, 2024
Home » மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவுடைய முயிசு வெற்றி

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவுடைய முயிசு வெற்றி

by damith
October 2, 2023 6:00 am 0 comment

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த பதவியில் உள்ள ஜனாதிபதியை தோற்கடித்து சீன ஆதரவு மொஹமது முயிசு வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் 54 வீத வாக்குளை பெற்று முயிசு வெற்றியீட்டியதை அடுத்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமது சோலிஹ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைநகர் மாலேவின் மேயரான முயிசு, ‘இந்தியாயை வெளியேற்றும்’ கோசத்துடனேயே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார்.

எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் வரை சோலிஹ் இடைக்காக ஜனாதிபதியாக பதவியில் நீடிக்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்தில் இருக்கும் 61 வயதான மாலைதீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சோலிஹ் தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியாவை முதன்மைப் படுத்தும் கொள்கையை அவர் பின்பற்றி வந்தார்.

மாலைதீவில் இந்தியாவின் செல்வாக்கு நீடித்து வந்ததோடு இந்திய சமுத்திரத்தின் முக்கிய பகுதி ஒன்றை கண்காணிக்கும் வகையில் மாலைதீவில் இந்தியா நிலைகொண்டிருந்தது. எனினும் முற்போக்கு கூட்டமைப்பின் கூட்டணியைச் சேர்ந்த 45 வயதான முயிசு, சீனாவுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளார்.

சீனா தனது கடற்படையை விரிவுபடுத்துவதில் அவதானம் செலுத்தும் நிலையில் இந்தியா தடுக்க விரும்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தனது இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறது. அதேபோன்று இந்தப் பகுதி ஊடாக வளைகுடாவில் இருந்து வரும் தனது வலுசக்தி விநியோகத்தையும் பாதுகாக்க சீனா எதிர்பார்க்கிறது.

கடந்த தசாப்தத்தில், மாலைதீவுக்கு இந்தியா இரு ஹெலிகொப்டர்களை வழங்கியதோடு 2021இல் சிறிய விமானம் ஒன்றையும் வழங்கியது. இந்நிலையில் இந்திய விமானங்களை செயற்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கே மாலைதீவில் இந்தியாவின் 75 இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவை வெளியேறும்படி கோரும் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மாலைதீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய படையினரை வெளியேறும் கோரிக்கை வலுவடைந்தது.

சோலிஹ்க்கு முன்னர் 2013 தொடக்கம் 2018 வரை மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த முற்போக்குக் கட்சின் அப்துல்லாஹ் யாமின் காலத்தில் மாலைதீவு சீனாவுடன் நெருக்கமாக செயற்பட்டதோடு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சி திட்டத்திலும் இணைந்தது. யாமின் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறை அனுபவிப்பதோடு இந்த ஆண்டு தேர்தலில் போட்டி இடுவதில் இருந்தும் அவர் தடுக்கப்பட்டார். முயிசுவின் வெற்றியை அடுத்து அவரது கூட்டணி அலுவலகத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

1978 ஆம் ஆண்டு பிறந்த முயிசு பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் கலாநிதித்துவ பட்டம் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வீடமைப்பு அமைச்சராக அவர் அரசியலில் நுழைந்தார். 2021இல் அவர் மாலே நகர மேயர் தேர்தலில் வெற்றியீட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT