Saturday, April 20, 2024
Home » மனிதநேயத்தின் முழு வடிவம்

மனிதநேயத்தின் முழு வடிவம்

by gayan
September 28, 2023 3:19 pm 0 comment

முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்த்திலுள்ள இறைத்தூதர் ஆவர். அவர் மனிதர்களோடு மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டதோடு மனிதர்களின் தேவைகளை கருத்திலெடுத்தார். மனிதரை மனிதராக நோக்கினார். மனிதாபிமானத்தில் அன்னார் உதாரண புருஷராகத் திகழ்ந்தார்கள். நுபுவ்வத்துக்கு முன்னரும் பின்னரும் எதிரியுடனும் நண்பனுடனும் அனைத்து மக்களுடனும் மனிதாபிமானமாக நடந்துகொண்டார்கள். அவர் கொண்டு வந்த இறைத்தூது மனிதர்களுக்கானது.

நபியவர்களுக்கு வஹி அருளப்பட்டபோது கதீஜா (ரழி) அவர்கள் கூறிய வார்த்தைகள், நபியின் மனிதாபிமானத்தைப் பறைசாற்றுகின்றது. ‘அல்லாஹ் மீது சத்தியமாக…. அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தவே மாட்டான். நீங்கள் உறவுகளைப் பேணிக்கொள்கிறீர்கள். ஏழைகள், பலவீனர்கள், அநாதைகள் போன்றோருக்கு உதவி செய்து அவர்களது சுமையைச் சுமக்கிறீர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். விருந்தாளிகளை கௌரவப்படுத்துகிறீர்கள். பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை நீக்கப் பாடுபடுகின்றீர்கள்’. (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இவை நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த மானுடப் பண்பை தெளிவாக எடுத்தியம்புகிறது. அன்னார் தனது தோழர்கள், மனைவியர், சிறுவர்கள், எதிரிகள், விலங்குகள், தாவரங்கள், சடப்பொருட்களுடன் கூட மனிதாபிமான அடிப்படையில் மிகவும் மென்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் நடந்துகொண்டார்கள். அன்னார் தமது மனைவியருடன் அன்பாக நடந்துகொண்டதோடு அவர்களுடன் நெருக்கமாகப் பழகினார்கள். குடும்ப உறவை கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்கள். அவர் கடுமையாக நடந்துகொள்ளவில்லை. மென்திறன்களையே பயன்படுத்தினார்கள். மனைவியரின் உணர்வுகளை மதித்தார்கள். அவர்களது விருப்பு வெறுப்புக்களைக்கூட புரிந்து வைத்திருந்தார்கள்

‘நீங்கள் என்மீது அன்பாக இருக்கிறீர்களா அல்லது கோபமாக இருக்கிறீர்களா என்பதனை நான் அறிந்து வைத்துள்ளேன். நீங்கள் என்மீது திருப்தியாக இருந்தால் ‘முஹம்மதின் இரட்சகன் மீது சத்தியமாக’ என்று கூறுவீர்கள். என்னோடு கோபத்தோடு இருந்தால் ‘இப்றாஹீமின் இரட்சகன் மீது சத்தியமாக’ என்று கூறுவீர்கள் என்றார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களுடன், நடப்பதில் போட்டி போட்டு தோல்வியடைந்துள்ளார்கள். இரண்டாவது முறை நடைபோட்டியில் வெற்றியடைந்தார்கள். அன்றடைந்த தோல்விக்காகத்தான் இவ்வெற்றி என்று கூறி சிரித்தார்கள்.

(ஆதாரம்: அஹ்மத், நஸாஇ, அபூ தாவூத்)

அதேநேரம் தமது தோழர்களுடனும் நபி (ஸல்) மனிதத்தன்மையோடு நடந்துகொண்டார்கள். அவர்களை நேசித்ததோடு அவர்களுக்கு முகமன் (ஸலாம்) கூறுவதில் முந்திக்கொண்டார்கள். அவர்களுக்கு மிக விருப்பமான பெயரை வைத்து அவர்களை பேசுவார்கள். உதவிகள் புரிவார்கள். அவர்களது நிம்மதிக்காக தன்னை வருத்திக்கொள்வார்கள்.

ஒரு பிரயாணத்தின்போது நபியின் தோழர்கள் நீரை இழந்து விட்டார்கள். அழிந்துவிட வேண்டியதுதான் என்று அங்கலாய்த்தார்கள். அப்போது நபிகளார் ‘நீங்கள் அழிந்துபோக நான் விடமாட்டேன்’ என்று கூறியவாரே ‘உங்களது சிறிய பாத்திரங்களை கொண்டு வாருங்கள்’ என்றார்கள். பின்னர் நீர் இருந்த பாத்திரத்தை கொண்டுவந்து நீரை பங்கீடு செய்ய ஆரம்பித்தார்கள். நீர் முடியும் தருவாயில் இருந்தது. அபூ கதாதா (ரழி) நீரை அருந்தாது பார்த்துக்கொண்டிருந்தார். ‘நீரை அருந்துங்கள்’ என்று அவரிடம் கூறப்பட்டபோது, நீங்கள் அருந்தும்வரை நான் அருந்தப்போவதில்லை என்றார்கள். அப்போது நபியவர்கள் ‘சமூகத்துக்கு நீரை பகிர்ந்தளிப்பவர் இறுதியாகவே அதனை அருந்துவார்’ என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இணைந்திருந்தார்கள். அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டார்கள். மாமன்னர்கள் போன்று சுகன்டியாக படாடோபத்தோடு இருக்கவில்லை. ஒரு தடவை ஒரு மனிதர் நபியவர்களை சந்திக்க வந்தபோது பேசுவதற்கு பயந்து நடுங்கிவிட்டார். இதனைப்பார்த்த நபியவர்கள் ‘சாதாரணமாக இருந்துகொள்ளுங்கள். நான் ஒரு அரசனல்லன். காய்ந்த இறைச்சித் துண்டங்களை சாப்பிட்ட ஒரு பெண்ணின் மகன்தான் நான்’ என்று கூறி தனது எளிமையை வெளிப்படுத்தினார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா, ஹாகிம்)

நபியவர்கள் தனது தோழர்களை சிரிக்கவைத்தார்கள். அவர்களின் நிலமைகளைக் கேட்டறிந்துகொள்வார்கள். அவர்கள் எப்படியுள்ளார்கள் என்று அவர்களை சென்று தரிசிப்பார்கள். நோயாளிகளிடம் சுகம் விசாரிப்பார்கள். ஒருவர் மரணித்தால் அதில் கலந்துகொள்வார்கள். தனது தோழர்களின் நோய் நிலையைப் பார்த்து கவலைகொண்டு அழுதுள்ளார்கள்.

ஸஃத் இப்னு உப்பாதா (ரழி) அவர்கள் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக நபியவர்களும் அவருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி), ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) போன்ற ஸஹாபாக்களும் வருகை தந்தார்கள். அச்சமயம் அவர் மயக்கமுற்று காணப்பட்டார். அவர் மரணித்து விட்டாரா என்று கேட்கப்பட்டபோது இல்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையை பார்த்த நபியவர்கள் அழுதுவிட்டார்கள். அவருடன் சேர்ந்து தோழர்களும் அழுதார்கள்…..

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நபியவர்கள் சிறுவர்களுடனும் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். சிறுவர்களுக்கு அன்பு காட்டுவார்கள். அவர்களோடு விளையாடுவார்கள். அவர்களது விளையாட்டுக் கடைகளை தரிசிப்பார்கள். பொருட்களை கொள்வனவு செய்வார்கள். அவர்களது உள நிலைகளை கருத்திலெடுத்து அவர்களுடன் இறங்கிப்போவார்கள். அவர் தொழும் நிலையில் பேரர்களின் விளையாட்டுகளுக்காக விட்டுக்கொடுப்பார்கள். பாட்டனின் முதுகில் பேரர்கள் சவாரி செய்வார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்வார்கள். முத்தமிடுவார்கள். அவர்களது சந்தோஷங்களுக்கு இடைஞ்சலாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்கு வரும்போது ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். தொழுகையின் இடைநடுவில் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் ஸுஜுத் செய்தார்கள். இதுபற்றி தொழுகை முடிந்த போது வினவப்பட்டது. அதற்கவர்கள் ‘எனது மகன் முதுகில் ஏறிக்கொண்டுவிட்டார். அவரது தேவை நிறைவேறுவதற்கு முன்னராக நான் அவசரமாக எழும்ப விரும்பவில்லை’ என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், நஸாஇ, பைஹகி)

தவறிழைத்தவர்களைத் திருத்தி விடுவதிலும் நபியவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார்கள். ஒரு நாட்டுப்புற அரபி பள்ளிவாசளில் சிறுநீர் கழித்துவிட்டார். தோழர்கள் அவரை தண்டிக்க முற்பட்டபோது ‘அவரை விட்டுவிடுங்கள். அதன்மேல் கொஞ்சம் நீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் இலகுபடுத்துபவர்களாகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள். கஷ்டப்படுத்துபவர்களாக அனுப்பப்படவில்லை’ என்றார்கள்.

(ஆதாரம் : புஹாரி)

தொழுகை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது ஒருவர் தும்மி விடுகின்றார். இதனைக்கேட்ட நான் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று சொல்லிவிட்டேன். எல்லோரும் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ‘ஏன் எல்லோரும் என்னை பார்க்கிறீர்கள்’ என்று நான் கேட்டுவிட்டேன். அவர்கள் தமது கைகளை கால்களில் அடிக்க தொடங்கி விட்டார்கள். தொழுகை முடிவடைந்தபோது சத்தியமாகச் சொல்கிறேன். எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். நான் நபியவர்களுக்கு முன்னரோ அவருக்குப் பின்னரோ அவரைப் போன்ற அழகாகக் கற்பிக்கின்ற ஆசிரியரொருவரைக் காணவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக… அவர் கண்டிக்கவுமில்லை, அடிக்கவுமில்லை, ஏசவுமில்லை. மாற்றமாக அவர் என்னிடம் ‘தொழுகையிலே கதைக்கக்கூடாது. இங்கு ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்குர்ஆன் ஓதுதல் போன்ற விடயங்களை மாத்திரமே செய்ய வேண்டும்’ என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ருகூவில் இருந்தபோது பள்ளிவாசளில் நுழைந்தேன். குறித்த அணியில் வந்து இணைந்துகொள்ள முன்பதாகவே ருகூஃ செய்துவிட்டேன். பின்னர் மெதுவாக நடந்துவந்து அணியுடன் இணைந்து கொண்டேன். தொழுகை முடிந்த பின்னர் என்னிடம் வந்த நபியவர்கள் ‘அல்லாஹ் உங்களது ஆர்வத்தை அதிகரிக்கட்டும். இதுபோன்று மீண்டும் செய்ய வேண்டாம்’ என்றார்கள்.

(ஆதாரம்: புஹாரி, அபூ தாவூத்)

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதாபிமான தூதர் என்பதற்கு சான்றாக அவரது வாழ்வில் நிறையச் சம்பவங்கள் உள்ளன. அவற்றில் ஒருசிலவே இங்கு எடுத்தியம்பப்பட்டுள்ளன. அன்னாரின் மனிதாபிமான பண்புகளில் நாமும்

படிப்பினை பெறுவோம்.

அஷ் ஷெய்க் யூ.கே. றமீஸ்…

எம்.ஏ. (சமூகவியல்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT