Saturday, April 20, 2024
Home » பதுளை மாவட்ட 26 தமிழ்மொழி பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்ற பங்களிப்புடன் பண்டாரவளையில் ‘பாராளுமன்ற அறிவகம்’

பதுளை மாவட்ட 26 தமிழ்மொழி பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்ற பங்களிப்புடன் பண்டாரவளையில் ‘பாராளுமன்ற அறிவகம்’

by Rizwan Segu Mohideen
September 27, 2023 12:24 pm 0 comment

பதுளை மாவட்டத்தில் உள்ள 26 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரின் பங்களிப்புடன் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு, தேசிய ஜனநாயக நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில், எதிர்காலத்தின் இளைஞர் சமுதாயமான பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய தகவல்கள் இலகுவான முறையில் எடுத்துரைக்கப்பட்டன. பல்வேறு நடைமுறை அம்சங்களைக் கொண்ட இந்த நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்தப் ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்வில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி, பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி பி.ருத்ரகுமார் ஆகியோர் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்கான வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு நடைபெற்ற பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், குறித்த பாடசாலையிலிருந்து முதன் முறையாகப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றவர் என்ற பாடசாலை வரலாற்றைக் கொண்ட பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி அவர்களுக்கு பாடசாலை சமூகம் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தது.

இந்நிகழ்வில் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் கே.சந்திரராஜா, பண்டாரவளை வலய ஆசிரிய ஆலோசகர் தேவகி, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய, பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி இஷாரா விக்ரமசிங்ஹ, ஊடக அதிகாரி மகேஸ்வரன் பிரசாத், ஊடக அதிகாரி சௌமிய ஏக்கநாயக, பொதுமக்கள் வெளித்தொடர்பு இணைப்பு அதிகாரி பியசிறி அமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT