Friday, April 19, 2024
Home » மலேசியாவில் இலங்கையர் கொலை சந்தேக நபர்கள் பொலிஸில் சரண்

மலேசியாவில் இலங்கையர் கொலை சந்தேக நபர்கள் பொலிஸில் சரண்

by sachintha
September 27, 2023 6:23 am 0 comment

மலேசியாவில், இலங்கையர் மூவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர், சரணடைந்துள்ளனர்.மலேசியாவின் கோலாலம்பூர் செந்துல் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.இலங்கையர்களே சந்தேக நபர்களென தகவல் கிடைத்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. மலேசியாவின் செந்துல் லோவர் கோயில் கிராமத்தில் பர்ஹென்டியன் வீதியில் உள்ள வீடொன்றில், கடந்த (22) மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

கைகள் கட்டப்பட்டு, தலை பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்டு காணப்பட்ட இலங்கையர்களின் சடலங்களை, மலேசிய பொலிஸார் கடந்த 23 ஆம் திகதி மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் சம்பவம் நடந்த வீட்டில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர்கள். இதில் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னர் சந்தேக நபர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்ததாக கோலாலம்பூர் பொலிஸ் பிரதான டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் சுமார் ஆறு மாதங்கள் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இக்கொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்கு பின்னர், பொலிஸார் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.

இதனிடையே பொலிஸார் மிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டதுடன், தயார் நிலையிலும் இருந்தனர்.

சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த எவரும் முன்வந்து தகவல்களை வழங்க முடியுமென அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்திருந்தார்.

விரைவில் சரணடையுமாறு சந்தேக நபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையிலேயே சந்தேக நபர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT