Home » தினகரன் முன்னாள் நிருபர் முஸ்தபா எம். ஜிப்ரி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு

தினகரன் முன்னாள் நிருபர் முஸ்தபா எம். ஜிப்ரி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு

by sachintha
September 27, 2023 12:22 pm 0 comment

அநுராதபுரம் மிகிந்தலை கட்டுகெலியாவ கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா (ஆசிரியர்) அலீமா உம்மா தம்பதிகளின் புதல்வரான மர்ஹூம் முஸ்தபா முஹம்மது ஜிப்ரி கஹடகஸ்திகிலிய துருக்கராகம கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

ஒரு ஆசிரியராக தனது தொழில் பயணத்தை ஆரம்பித்த இவர், மரணிக்கும் போது கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இது தவிர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், சித்திரக் கலைஞராகவும், பேச்சாளராகவும், சிறந்த குரல்வளம் கொண்ட பாடகராகவும் விளங்கிய இவர், சிறந்ததொரு ஆசிரியராக, பள்ளிவாசல் நிர்வாகியாக, சமூகசேவை அமைப்புகளின் போசகராகத் திகழ்ந்தார்.

தினகரன் பத்திரிகையின் இப்பகுதி பிராந்திய நிருபராக நீண்ட காலம் பணியாற்றியதோடு, இலங்கையின் தேசியப் பத்திரிகைகள் பலவற்றில் இவரால் எழுதப்பட்ட கட்டுரை, கவிதை, கதைகள் வெளிவந்துள்ளன. இவர் எழுதி வெளியிட்ட ‘மிஹ்ராஜ் ஓர் அற்புதப் பயணம்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

பாலர் பாடசாலை ஒன்றை கிராமத்தில் ஆரம்பித்தல், அஹதியாப் பாடசாலையை ஆரம்பித்தல், வை.எம்.எம்.ஏ கிளையைத் தாபித்தல் உள்ளிட்ட பல பணிகளில் முன்னோடியாக விளங்கிய இவர், அவற்றின் வளர்ச்சிக்குத் துணை நின்றார். ஊரில் இயங்கிய ஜனசா நலன்புரிச் சங்கம், இளைஞர் கழகம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றின் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்டார்.

சமாதான நீதவானாகவும், சமாதான நீதிமன்றத்தின் /சமரச சபையின் உபதலைவராகவும், துருக்கராகம வை.எம்.எம்.ஏ, துருக்கராகம அஹதியா பாடசாலை, பள்ளி நிர்வாகசபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களில் தலைவர், செயலாளர், கணக்குப் பரிசோதகர், ஆலோசகர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றிய இவர், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. 2005 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு ‘வித்தியா கீர்த்தி ஸ்ரீ’ பட்டம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் எழுதக்கூடிய ஆற்றலை இவர் பெற்றிருந்தார்.

இவர் அஷ்ரப் நுபைனா பாலர் பாடசாலை ஆசிரியையின் கணவராவார். மர்ஹூம் எம். எம். ஜிப்ரி தனது 55 ஆம் வயதில் அண்மையில் காலமானார். இவரின் மறைவு இந்தப் இப்பிரதேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

கிரிபாவையூரான் ஏ.எம்.எம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT