Friday, April 26, 2024
Home » போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதில் அதிக கவனம் தேவை !

போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதில் அதிக கவனம் தேவை !

by sachintha
September 27, 2023 6:00 am 0 comment

இன்றைய காலகட்டத்தில் இலங்கை முகம்கொடுத்துள்ள பாரிய அச்சுறுத்தல்களில் போதைப்பொருள் குற்றங்கள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அந்தளவுக்கு போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வந்து சேர்வதே இதற்கான காரணமாக உள்ளது.

ஒரு காலத்தில் கொழும்பில் காணப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகங்களும் குற்றங்களும் இன்று கிராமம், நகரம் என்ற வேறுபாடுகள் இன்றி வியாபித்துக் காணப்படுகின்றன. கஞ்சா, ஐஸ் முதல் ஹெரோயின், கொக்கைன் வரையான கடும் பயங்கரமான போதைப்பொருட்களும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வந்து சேரவே செய்கின்றன.

இந்த நிலையில் போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரின் தரவுகளின்படி, போதைப்பொருள் குற்றங்கள் மாத்திரமல்லாமல் அவற்றைப் பாவிப்போரினதும் விற்பனை செய்வோரினதும், கட்டத்தலில் ஈடுபடுவோரினதும் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. அதன் விளைவாகப் பாடசாலை மாணவர்கள் கூட போதைப்பொருள் பாவிக்கக் கூடியவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு போதைப்பொருள் பாவனை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல. அதன் விளைவாக உடல், உள ரீதியில் ஏற்படுகின்ற உபாதைகள் இலகுவில் குணப்படுத்தக்கக் கூடியவையும் அல்ல. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவென பெருந்தொகை நிதியை செலவிட நேரிடும்.

அதேநேரம் போதைப்பொருள் பழக்கத்தின் ஊடாக வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவதோடு, சமூக கலாசார சீரழிவுகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும். இவையும் சமூகத்தின் நற்பண்புகள் மற்றும் பழக்கவழக்கங்களில் வீழ்ச்சி ஏற்படவே வழிவகுக்கும்.

போதைப்பொருள் குற்றங்களால் சமூகமும் நாடும் முகம்கொடுக்கும் நெருக்கடிகளையும் சீரழிவுகளையும் கருத்தில் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் கடுமைப்படுத்தியுள்ளனர். அதற்கேற்ப போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான கைதுகளும் தண்டனை வழங்குதல்களும் கூட அதிகரித்துள்ளன.

அத்தோடு போதைப்பொருள் குற்றங்களின் தீங்குகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படவே செய்கின்றன.அந்த வகையில் கடந்த ஞாயிறன்று 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டமை குறிப்பிடத்தக விடயமாகும்.

இவ்வளவு தொகை பெறுமதியான போதைப்பொருள் இந்நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் இப்போதைப்பொருளை இந்நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுள்ள முறை பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் இப்போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளார்.

கென்யாவைச் சேர்ந்தவர் என்றாலும் வடஆபிரிக்க நாடான எதியோப்பியாவில் இருந்துதான் இந்த போதைப்பொருளை இங்கு கடத்தி வந்துள்ளார். எதியோப்பியாவின் அடிஸ்அபாபா விமான நிலையத்திலிருந்து கட்டார் நாட்டின் டோஹா விமான நிலையத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சட்டவிரோத கொக்கைனுடன் வந்தடைந்துள்ளார். நான்கு கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை மூன்று பிஸ்கட் ரின்களில் சூசகமான முறையில் மறைத்து வைத்தே இங்கு கொண்டு வந்துள்ளார். அதனை இந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு இக்கடத்தலை முறியடித்து போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நபர் கென்யாவிலிருந்து நேரடியாகவே டோஹாவுக்கு பயணித்திருக்க முடியும். அதனை தவிர்த்து கென்யாவில் இருந்து எதியோப்பியாவுக்கு சென்று அங்கிருந்து டோஹாவுக்கு விமானத்தில் பயணித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருக்கிறார்.

எத்தனையோ ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள கென்யாவைச் சேர்ந்த இந்நபர் எவ்வளவு தூரம் சூட்சுமமான முறையில் இந்த நான்கு கிலோ போதைப்பொருளையும் இங்கு கடத்தி வந்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதன் ஊடாக சட்டவிரோத போதைப்பொருள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் எத்தகையது என்பதை எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே போதைப்பொருள் குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி தவிர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன் ஊடாக போதைப்பொருள் குற்றங்கள் அற்ற தேசத்தை உருவாக்க முடியும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT