Thursday, March 28, 2024
Home » ‘கொழும்பு துறைமுக நகரம்’ – ‘கொழும்பு நிதி வலயம்’ ஆக மாற்ற புதிய சட்டம்

‘கொழும்பு துறைமுக நகரம்’ – ‘கொழும்பு நிதி வலயம்’ ஆக மாற்ற புதிய சட்டம்

- அதில் இலங்கை முதலீட்டுச் சபையை பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்கவும் நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
September 26, 2023 8:12 pm 0 comment

இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்தியஸ்தானத்தினால் (IADRC) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தானம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். இந்த ஆரம்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“மாற்று பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் மத்தியஸ்தம் உள்ளிட்ட இரு துறைகளிலும் இலங்கை பெருமளவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதே தற்போதைய பிரச்சினையாகும். நாம் முதலில் இந்த செயன்முறைக்கு எவ்வாறு எம்மை வடிவமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

அது தொடர்பில் எமக்கு கலாசார ரீதியான மாற்றம் அவசியம். குறுகிய காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் அந்த மாற்றங்கள் அமைய வேண்டும். அதேபோல் நாம் பழமையான நீதிமன்ற கட்டமைப்புடன் இணைந்துள்ளமை எமக்கு சவாலான விடயமாகும்.

நாம் இலங்கையை பொருளாதார மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க வேண்டும். கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த சட்டத்தை உருவாக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும். அடுத்தபடியாக முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு மாறாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டும் என்பதோடு, மேற்படி விடயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்த ஆணைக்குழுவே தீர்வுகளை வழங்கும்.
நாம் பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் செல்லவுள்ளோம். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுக்கள் நிறைவை எட்டியுள்ளன. மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்று தொடர்பில் இந்தியாவுடனும் கலந்தாலோசித்துள்ளோம். பங்களாதேஷுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பிராந்தியத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான (RCEP) அமைப்பினுள் இணைந்துகொள்ள எதிர்பார்த்துள்ளோம். உலகின் வலுவான பொருளாதார சமூகம் அதற்குள் இருக்கின்றது. அதனால் எமக்கு மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக உறுதிப்படுத்த வேண்டும். சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். அதன்போது சிங்கப்பூருக்கு நிகராக எமது செலவீனங்கள் குறைவடைய வேண்டும். அதனால் சிங்கப்பூருடன் போட்டியிடும் இயலுமையும் எமக்கு கிட்டும். அந்த இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டுமெனில் எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, நாட்டின் சட்டத்தரணிகளும் ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களும் மாற்றுச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். இலங்கை உங்களுக்கான சந்தையல்ல, இலங்கைக்கு வெளியிலேயே உங்களுக்கான மிகப்பெரிய சந்தை வாயப்பு உள்ளது. இந்த துறை மாத்திரமின்றி புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), புளொக் செயின் மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட அபிவிருத்தி கண்டுவரும் துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அதனை செய்யும் பட்சத்தில் நாம் பொருளாதார மத்தியஸ்தானமாக மாற முடியும். நாம் தாமதமடைந்தால் அந்த வாய்ப்பு மற்றுமொருவருக்கு கிட்டும்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, நாம் பாரிய அர்பணிப்புக்களை செய்து வருகிறோம். பசுமை ஹைட்டிரிஜன், பச்சை அமோனியா மற்றும் காற்றின் மூலம் 60 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். சிலர் 40 கிகாவோட்களை உற்பத்திச் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.

அது தொடர்பிலான வர்த்த வாய்ப்புகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தோடு அனைத்து புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேற்படி துறைகளில் கல்வி,நிபுணத்துவ தெரிவுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் மேம்படுத்தல்களுக்கு அவசியமான தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம். இலங்கையை செயல்திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய சட்ட சூழலை கொண்ட நாடாக மாற்றியமைப்பதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.” என ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தூதுவர்கள், முன்னாள் தூதுவர்கள், இலங்கையின் அபிவிருத்து வேலைத்திட்டங்களுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன், மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் நாயகம் தாரா ஜயதிலக்க உள்ளிட்டவர்களுடன் சட்டத்தரணிகள், இலங்கை முன்னணி நிறுவனங்களின் பிரநிதிகள் பலரும் பங்குபற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT