Home » இந்தியாவிடம் தோற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

இந்தியாவிடம் தோற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி:

by gayan
September 26, 2023 5:31 am 0 comment

சீனாவிலிருந்து நிரோஷன் பிரியங்கர

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 19 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கை வெல்லும் முதல் பதக்கமாக இது அமைந்தது.

நேற்று (25) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. ஸ்மிரிதி மந்தனா (46) மற்றும் ஜமிமா ரொட்ரிகஸ் (42) 2 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 73 ஓட்ட இணைப்பாட்டமும் அந்த அணியை வலுப்பெறச் செய்தது.

இந்நிலையில் 117 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த இலங்கை அணி வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராடியபோதும் 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களையே பெற்றது. மத்திய வரிசையில் ஹசினி பெரேரா 25 ஓட்டங்களையும் நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கடந்த 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்சோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை பதக்கம் ஒன்றை வென்றது ஒன்பது ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.

தேசிய சாதனை வீண்

இதேவேளை நேற்று (25) நடைபெற்ற நீச்சல் போட்டியில் 50 மீற்றர் பேக் ஸ்ட்ரோக் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற அகலங்க பீரிஸ் தேசிய சாதனையை முறியடித்தார். அவர் இந்தப் போட்டியை 26.01 வினாடியில் நிறைவு செய்தார். எனினும் அவரது திறமை இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற போதுமாக இருக்கவில்லை. அவர் போட்டியில் 10ஆவது இடத்தையே பெற்றார்.

இதன்போது தான் படைத்திருந்த தேசிய சாதனையையே (26.12 வினாடி) அவர் முறியடித்தார். இந்த நீச்சல் போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்ற இலங்கையின் கங்கா செனவிரத்ன 31.73 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து எட்டாவது இடத்தை பிடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற தவறினார்.

டைகொன்டோ, ஜூடோ

இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் டைகொன்டோ போட்டியின் 58 கிலோகிராம் எடைப் பிரிவில் 32 பேர் சுற்றில் முதல் போட்டியில் பங்கேற்ற சாலிந்த சம்பத், கம்போடியாவின் யால் யுதெத்தை 2–0 என வீழ்த்தி 16 பேர் சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் தென் கொரியாவின் ஜெங்க் ஜுனை எதிர்கொண்ட அவர் 0–2 என தோல்வியை சந்தித்தார்.

இதன் பெண்கள் பிரிவின் 49 கிலோகிராம் எடைப் பிரிவில் எம்.ஐ. புஷ்பா குமாரி போட்டியிட இருந்தபோதும் சுகவீனம் காரணமாக அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

மறுபுறம் ஜூடோ போட்டியில் பங்கேற்ற இலங்கையின் சாமர நுவன் தர்மவர்தன கிரிகிஸ்தானின் சின்கிஸ்கான் சின்கெகனிடம் 0–10 என தோல்வியை சந்தித்தார்.

படகோட்டம்

படகோட்டப் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு பங்கேற்ற இலங்கையின் மொஹமட் நப்ரான் நான்காவது இடத்தை பெற்றதோடு பெண்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய மஹேஷி லியனகே 5 ஆவது இடத்தையே பிடித்தார். படகோட்ட போட்டிகளில் இலங்கையின் நான்கு வீர, வீராங்கனைகள் பங்கேற்றதோடு எந்தப் பதக்கமும் வெல்லாத நிலையில் நேற்று இலங்கை திரும்பினர்.

ரக்பி அணிக்கு வெற்றி

இதனிடையே ரக்பி போட்டியின் ஆரம்ப சுற்றின் முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் 9–13 ஆம் இடங்களுக்கான போட்டியில் பங்கேற்க வேண்டி ஏற்பட்டிருக்கும் இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை 36–10 என்ற புள்ளிகளால் வெற்றியீட்டியது. இதன் முதல் பாதியில் 12–10 என முன்னிலை பெற்ற இலங்கை இரண்டாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது.

இலங்கை மெய்வல்லுனர் அணி வருகை

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் 9 தடகள வீர, வீராங்கனைகள் இன்று (26) ஹாங்சோ நகரை அடையவுள்ளனர். இந்த அணியில் காலிங்க குமாரகே, அருண தர்ஷன, பபசர நிக்கு, ராஜித்த ராஜகருணா, தினுக தேஷான், பசிது கொடிகார, ருமேஷிகா ரத்னாயக்க, நதீஷா ராமநாயக்க, சயுரி மெண்டிஸ் மற்றும் ஜயேஷி உத்தரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் 3 வாரங்களுக்கு முன்னரே சீனாவின் நென்ஜின் நகருக்கு சென்று பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

இம்முறை விளையாட்டு போட்டிக்கு இலங்கையின் 16 தடகள வீர, வீராங்கனைகள் பெயரிடப்பட்டபோதும் குறுந்தூர வீரர் யுபுன் அபேகோன் மற்றும் உஷான் திவங்க பங்கேற்கவில்லை. அணியின் மற்ற வீர, வீராங்கனைகளான தருஷி கருணாரத்ன, சாரங்கி சில்வா மற்றும் டில்ஹானி லேகம்கே இன்று இலங்கையில் இருந்து ஹாங்சோ நகரை நோக்கி வருகை தரவிருப்பதோடு, ஆரம்ப விழாவில் பங்கேற்பதற்காக கயந்திகா அபேரத்ன முன்கூட்டியே சீனாவுக்கு வருகை தந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT