மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் கொந்தளிப்பு!

 

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்று முன்னர் அறிவித்தது இந்திய அரசு. எனினும் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டதால் தமிழக கொந்தளிப்பு தீர்ந்து விட்டது. ஆனால் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலில் காத்திருக்கும் தமிழக மக்களின் கோபத் தீ இன்னும் அடங்கவில்லை.

தமிழர்களின் உணர்வுகளில் தொடர்ந்து வேல் பாய்ச்சும் வேலையில் மத்திய அரசு ஏன் ஈடுபடுகிறது? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளை நம்பாமல் இளைஞர்கள் சுய எழுச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் வேளையில் மத்திய அரசு மீது ஆத்திரம் அதிகரித்துள்ளது.

இது குறித்துப் பேசிய தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் வெ.பாரதி, "தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. முல்லை பெரியார், காவிரிநதி நீர்ப் பங்கீடு போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் தண்ணீர் தரக் கூடாது என்பது இந்திய அரசுடைய நிலைப்பாடு.

அதன் தொடர்ச்சியாக நமது பண்பாடு மற்றும் அடையாளத்தையும் இப்போது அழிக்கப் பார்க்கின்றனர்.

இவ்வளவு வெளிப்படையாக இதுவரை யாரும் செய்ததில்லை.இந்தியாவிற்கான ஒற்றைப் பண்பாட்டை அவர்கள் முன்னிறுத்துகின்றனர். இது, இயல்பிலே தமிழர்களிடம் உள்ள எதிர்க்கும் குணத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர்களால் முடிந்ததைச் செய்கின்றனர். எல்லாவற்றையும் தமிழர்கள் எப்படி முறியடித்தார்களோ, அதே போல் இதையும் முறியடிப்பார்கள்" என்றார் அவர்.

'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறும் போது, 'இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் நாடு. ஒரு நாட்டை எப்படி வரையறுப்பது என்று முறை இருக்கிறது. அதன் உள்ளே இருக்கக் கூடிய தேசியங்களை அங்கீகரிக்க வேண்டும். தனக்கான தேசியத்தை ஏற்றுக் கொள்வது மனிதனுடைய அடிப்படை உரிமை என்று ஐ.நா. சாசனம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால் தமிழ் தேசியம் என்பது என்னுடைய அடிப்படை உரிமை. இந்தப் பண்பாட்டை, அடையாளத்தைப் பாதுகாப்பது இந்திய அரசியல் சாசனம். இந்த அரசியல் சாசனத்தை நடைமுறைபடுத்துகின்ற, பாதுகாக்கின்ற கடமை அரசுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு இனத்தின் மொழியை, பண்பாட்டை மறுப்பது மனித உரிமைக்கு எதிரானது.

அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாக இருந்தாலும் சரி. ஒரு மனிதனுடைய பொருளாதார சுதந்திரம், பண்பாட்டு சுதந்திரம் ஆகிய இரண்டையும் யாரும் தடுக்க முடியாது. அதன்படி ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டு அடிப்படை உரிமை. பொங்கல் என்ற பண்பாட்டு விழாவை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்றாலே இந்திய ஒற்றுமையை மறுக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏதோ ஒரு அடையாளத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இதுபோல தேசிய அடையாளங்களில் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்றால், ஐ.நா. சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒரு தேசிய இனத்தின் உரிமையை மறுக்கக் கூடிய அதிகாரம் இந்திய அரசுக்குக் கிடையாது. ஜல்லிக்கட்டை சர்வதேச அரங்கில் கொண்டு நிறுத்தினால் இந்திய அரசு குற்றவாளிக் கூண்டில்தான் நிற்க வேண்டி வரும். பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய யூனியன். இந்த அடையாளத்தை மறுக்கும் வேலையைத் தான், தற்போது பி.ஜே.பி அரசு தொடங்கியுள்ளது.

'இந்தியா என்பது வெவ்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாடு கிடையாது. அதன் அடையாளம் ஒன்றுதான்' என்று பாதுகாப்புத் துறை செயலாளர் அஜித் தோவல் சொல்கிறார். இதைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்லியது. ஒரே பண்பாடு என்றால் இந்துத்துவப் பண்பாடு என்று நிலைநிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. அதை மறுக்கக் கூடிய பண்பாடுகளை எல்லாம் ஒழித்துக் கட்டும் வேலைதான் தற்போது நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகை எல்லாம் இந்துத்துவ அடையாளத்துக்குள் வரவில்லை, அதனால் அதை எதிர்க்கிறார்கள். ஏன் ஹோலி பண்டிகையைத் தடை செய்யவில்லை? பெண்கள் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ள அந்த விழாவை இந்த அரசு அங்கீகரிக்கிறது என்றால் எதனை உணர்த்த விரும்புகிறார்கள்?

தமிழர்கள் பண்பாட்டு ரீதியாக தனித்த அடையாளங்களுடன் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இது அவர்களுக்கு சிக்கலாக உள்ளது. அதனால்தான் தங்கள் பண்பாட்டைக் காக்க முயலும் தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் மீதெல்லாம் தாக்குதலைத் தொடுக்கிறது பி.ஜே.பி.

இது பண்பாட்டு, இன ரீதியிலான சண்டை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த அறிவிப்பை தனியார் நிறுவனங்கள் எப்படிக் கையாளும் என்றும் பார்க்க வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை தர வேண்டிய அவசியம் இல்லை, கிறிஸ்தவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ரம்ழான் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்கிற நடைமுறைதான் தற்போது இருக்கிறது. விடுமுறை என்பதன் அர்த்தமே மற்றவர்கள் கொண்டாட்டத்தில் பங்குபெறுவது தானே தவிர, அவர் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை' என்று ஆவேசமாக சொல்லி முடித்தார்.

"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் வீதிகளில் திரள்கிறார்கள். ' பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்' என பொதுமக்கள் கொந்தளிக்கும் சூழலில், கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதை அதிர்ச்சியோடு கவனித்தார்கள் தமிழ் உணர்வாளர்கள்.எனினும் பொங்கல் சர்ச்சை நீங்கி விட்டது.

'ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்பவே இப்படியொரு சிறப்பு நினைவூட்டலைச் செய்தது மத்திய அரசு" எனக் கொந்தளிக்கிறார் சீமான். "தமிழனைப் போல் இந்திய தேசியவாதியாக இருந்தவர்கள் வேறு யாருமில்லை.

முகமது அலி ஜின்னா தனி நாடு கேட்ட போது, அவருக்கு இருந்த நியாயங்களை விட ஆயிரம் காரணங்கள் தமிழனுக்கும் இருந்தன.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் நாடு போகப் போகிறது என்று காமராஜருக்கும் பசும்பொன் தேவருக்கும் தெரியவில்லையா? நம்முடைய மொழி, பண்பாடு, வாழ்வியல் கலாசாரம் உள்ளிட்டவை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.

ஆனாலும், அதை எல்லாம் மறந்துவிட்டு இந்தியன் என்ற உணர்வோடு கரைந்து நின்றோம். அப்படி இருந்த மக்களை, தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்" எனக் கொந்தளிப்போடு பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

" நமது சகோதர மாநிலங்களுக்கு மதிப்பளித்து ஓணத்துக்கும் உகாதிக்கும் விடுமுறை அளிக்கிறோம். குருநானக்கிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? மகாவீர் ஜெயந்திக்கும் விடுமுறை அளிக்கிறோம். தீபாவளி, ரம்ழான், கிறிஸ்மஸ் போன்றவை திணிக்கப்பட்ட பண்டிகைகள்.

உழவர் பெருநாள் என்பது தமிழனின் வாழ்வோடு இணைந்த பண்டிகை. அதைக் கொண்டாடுவதற்கு எனக்கு விடுமுறை கிடையாது என்றால், பல்வேறு மொழிவழி மக்கள் வாழ்கின்ற நாடா இது? இது தேசங்களின் ஒன்றியம்தானா என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட மோடி, ஒற்றை ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இது எவ்வளவு பெரிய ஆபத்தில் நிற்கப் போகிறது என்று அவர்கள் உணரவில்லை. ஒவ்வொரு மொழிவழி தேசிய இனத்துக்கும் பண்பாடு, கலாசாரம் எனப் பல அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றைக் கட்டிக் காப்பதற்காகத்தான் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

அம்மா மீது பற்று இருந்தால்தான், அடுத்த அம்மா மீதும் பற்று வரும். அதை விட்டுவிட்டு, நீ தமிழனாகவே இருக்கக் கூடாது என்றால், நான் ஏன் இந்தியனாக இருக்க வேண்டும்? வீட்டையே நேசிக்கக் கூடாது என்றால், நாட்டை மட்டும் நான் ஏன் நேசிக்க வேண்டும்? இப்படியொரு நெருக்கடி நிலைக்குத்தான் நம்மைத் தள்ளுகிறார் மோடி.

' கச்சதீவு ஒருபோதும் இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்ததில்லை' என பா.ஜ.கவும் சொல்கிறது. காங்கிரஸ் கட்சியும் சொல்கிறது. ஒருபோதும் பாத்தியப்படாத ஒன்றை, ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்? யாருக்கும் சொந்தமில்லாமல் எப்படி ஒரு தீவு இருக்க முடியும்?

கண் வழியாக போதை ஏற்றும் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடச் சொல்கிறீர்கள். வாய்வழியாக போதை ஏற்றும் சாராயக் கடைகளில் தேசிய கீதம் பாட வைப்பீர்களா? என்னை நானாக இருக்க வைத்தால்தான், எனக்குள் தேசப்பற்று வளரும். இதையெல்லாம், இந்தத் தலைமுறையின் பிள்ளைகள் மிக நுட்பமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நான் பேசவில்லை. ஒவ்வொருவரும் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். சென்னை கடற்கரையில், மதுரையில், தஞ்சையில் பல்லாயிரக்கணக்கில் ஜல்லிக்கட்டுக்காக கூடுகின்றவர்களை, கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

எங்கள் உரிமைகளை நசுக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசும் துணை போகிறது. உங்கள் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். இல்லையென்றால், தமிழர் உணர்வுக்கு எதிரான முதலமைச்சராகத்தான் பன்னீர்செல்வத்தை மக்கள் பார்ப்பார்கள்" எனக் கொதிப்புடன் பேசி முடித்தார் சீமான். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...