Home » உலக மக்களை அச்சுறுத்தும் மற்றொரு வைரஸ் தொற்று!

உலக மக்களை அச்சுறுத்தும் மற்றொரு வைரஸ் தொற்று!

by gayan
September 26, 2023 6:00 am 0 comment

உலகில் காலத்திற்குக் காலம் சிலவகை நோய்கள் தலைதூக்குவது வழமையாகும். அந்த வகையில் அண்மைக் காலத்தில் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொவிட் 19 பெருந்தொற்று கட்டுப்பாடு நிலையை அடைந்த சொற்ப காலத்திற்குள் மற்றொரு வைரஸ் நோய் தலைதூக்கியுள்ளது. அது தான் நிபா வைரஸ் நோயாகும். அந்நோய் குறித்து உலகின் பல நாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையிலும் இவ்வைரஸ் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அவை நாட்டுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சுகாதார மருத்துவ துறையினரால் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அத்தோடு இவ்வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியுள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, நிபா வைரஸ் இதுவரைக்கும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இல்லை. அதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பெரிதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதேவேளை, இவ்வைரஸின் தொற்றுக்கு உள்ளான ஆறு பேர் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவ்வைரஸின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கேரள மாநில அரசு முன்னெடுத்துள்ளது.

தென்னிந்தியாவுக்கு அயல் நாடாக விளங்கும் இலங்கை, இவ்வைரஸின் பிரவேசத்தை தவிர்ப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. ஏனெனில் இலங்கை மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவும் தொடர்பாடலும் போக்குவரத்தும் நீடித்து வருகின்றன. வியாபாராம், புனித யாத்திரை, மருத்துவம் என பல்வேறு தேவைகளின் நிமித்தம் இலங்கையர் தென்னிந்தியாவுக்கும் தென்னிந்தியர் இலங்கைக்கும் வருவதும் போவதுமாக உள்ளனர். அத்தோடு தென்னிந்தியர் இலங்கை ஊடாக பல நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இவ்வைரஸ் இந்நாட்டுக்குள் வருவதைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸின் பரவுதல் வீதம் குறைவாகக் காணப்பட்டாலும் அது அதிக இறப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மத்தியில் இறப்பு வீதம் 40 தொடக்கம்- 75 வீதம் வரை காணப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதனால்தான் இவ்வைரஸ் தொற்றைத் தவிர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

நிபா வைரஸ் முதலில் மலேசிய நாட்டில் 1998 இல் அடையாளம் காணப்பட்ட ஒன்றான போதிலும் உலகின் பல நாடுகளிலும் பதிவாகக்கூடிய நிலைமையை தற்போது அடைந்துள்ளது. அவற்றில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

இவ்வைரஸ் பழம் தின்னும் வௌவால்களில் இருந்து பன்றிகளுக்கும், பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கும் முதலில் பரவியதாக நம்பப்படுகிறது. இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கின்ற அதேநேரம், மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒன்றாக உள்ளது.

ஒருவர் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானதும் தலைவலி, தசைவலி, சோர்வு, குமட்டல் போன்ற இலேசான அறிகுறிகள் உண்டாகும். நோய் நிலை, மூளையின் செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கும் போது அது மனக்குழப்பம், வலிப்பு மற்றும் மூளையழற்சி என தீவிர நிலைகளை அடையும். அதனால் இந்நோய்க்குரிய அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவதும் அவர்களுடன் நெருங்கி பழகுபவர்களை கண்காணிப்பதோடு தேவைப்படும் பட்சத்தில் அவர்களையும் தனிமைப்படுத்தவும் தவறக்கூடாது. அத்தோடு வௌவாலின் உமிழ்நீர் அல்லது சிறுநீரினால் அசுத்தமடைந்த பழங்களை உண்பதைத் தவிர்த்துக் கொள்வதே சிறந்தது என்று மருத்துவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இவ்வைரஸ் தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கோ கட்டுப்படுத்திக் கொள்வதற்கோ விஷேட மருத்துவ சிகிச்சை முறைகள் எதுவும் இன்னும் வரவில்லை. அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் நிபா வைரஸ் தொற்று தவிர்ப்பு தொடர்பில் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT