Friday, March 29, 2024
Home » பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்த ரஷ்யா

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்த ரஷ்யா

- உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

by Prashahini
September 22, 2023 11:01 am 0 comment

உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டின் பொருட்களிற்கான விலை ஏற்றத்தினை குறைப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷ்யாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனினும் யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT